பாலியல் வன்கொடுமை வழக்கில் சயனைடு மோகனுக்கு 12 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 30th March 2019 09:16 AM | Last Updated : 30th March 2019 09:16 AM | அ+அ அ- |

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளில் சயனைடு மோகனுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பன்டுவாலைச் சேர்ந்தவர் மோகன்குமார். சயனைடு மோகன் என்று அழைக்கப்படும் இவர், பெண்களை திருமண ஆசைக்காட்டி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு பின்னர் சயனைடு கொடுத்து கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் மங்களூரு நீதிமன்றத்தில் உள்ளது. இதில் ஏற்கெனவே 7 வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பெலகாவி இன்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென்கன்னட மாவட்டம் பன்டுவால் வட்டம் பெரமுகரு, பெரஜே கிராமங்களைச் சேர்ந்த 2 பெண்களை பாலியியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை மங்களூரு நீதிமன்றத்தில் நீதிபதி ரங்கசாமி முன்னிலையில் வந்தது.
இன்டல்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகன்குமாருடன் காணொளி கலந்துரையாடல் மூலம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளித்த நீதிபதி, ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, ரூ. 18 ஆயிரம் அபராதத்தையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...