"காங்கிரஸில் பாஜக எம்எல்ஏக்கள் இணைவது சாத்தியமில்லை'

பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைவதாகக் கூறப்படுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்றார் கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.

பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைவதாகக் கூறப்படுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்றார் கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா.
கலபுர்கி மாவட்டத்துக்குள்பட்ட சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட அவர்,  செய்தியாளர்களிடம் கூறியது: 
கர்நாடகத்தில் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் அக் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தொண்டர்களுக்கிடையே இணக்கம் இல்லை. இதனால், தேர்தல் முடிவும் அந்தக் கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. 
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள் என்று அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். அவரின் கணிப்பு தவறாகும். பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேருவார்கள் என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. 
ஆட்சியில் அமரப்போகும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்ல பாஜக எம்எல்ஏக்கள் ஏமாந்தவர்கள் அல்ல. கர்நாடக அரசியல் குறித்து வேணுகோபாலுக்கு ஒன்றும் தெரியாது. அவர் கர்நாடகத்தில் அதிக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில்லை என்று புரிகிறது. முடிந்தால், கர்நாடகத்தில் காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என்று கூறட்டும். 
கர்நாடகத்தில் சின்சோளி, குந்தகோலா ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் பணத்தை முதலீடாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் எடியூரப்பா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com