வருமான வரித் துறை சோதனையில் பாரபட்சம்
By DIN | Published On : 15th May 2019 08:16 AM | Last Updated : 15th May 2019 08:16 AM | அ+அ அ- |

வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவதில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஹுப்பள்ளியில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், சின்சோளி, குந்தகோலா சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்தவர்களோ அல்லது அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தங்கியுள்ள ஹோட்டல்களில் வருமான வரித் துறையின் சோதனை நடத்துவதில்லை. தேசிய அளவில் வருமான வரித் துறையினர் ஒருதலைபட்சமாக பணியாற்றி வருகின்றனர்.
மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத்தின் விமர்சனத்துக்கு எதுவும் கூற விரும்பவில்லை. இடைத்தேர்தலுக்குப் பிறகு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும். மக்கள் அன்பு வைத்திருப்பதால், நான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கூறுவதில் தவறேதுமில்லை. அன்பால் அவர்கள் கூறுவதை தவறாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார் சித்தராமையா.