ஹொரமாவு ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சேதமடைந்த கட்டடத்தை இடித்து தள்ளும் பணி தொடக்கம்
By DIN | Published On : 15th May 2019 08:15 AM | Last Updated : 15th May 2019 08:15 AM | அ+அ அ- |

ஹொரமாவு ரயில்வே சுரங்கப்பாதை அருகே சாய்ந்த கட்டடத்தை மாநகராட்சி உத்தரவின்படி இடித்து தள்ளும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பெங்களூரு ஹொரமாவு ரயில்வே சுரங்கப்பாதை அருகே ரத்தன்சிங் என்பவருக்கு சொந்தமான 4 மாடிக் கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் அருகே புதிதாக கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது ஹுக்கும்சிங்கிற்கு சொந்தமான 4 மாடிக்கட்டடம் சாய்ந்தது. இதனையடுத்து புதிய கட்டடம் கட்டும்பணி நிறுத்தப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பாதுகாப்பை கருதி, சாய்ந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து அந்த கட்டடத்தில் உள்ளவர்களை அப்புறப்படுத்தி, செவ்வாய்க்கிழமை நண்பகல் கட்டடத்தை இடிக்கும் பணியை தொடங்கியது. கட்டடத்தை இடிக்கும் பணி இன்னும் 2 நாளில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சாய்ந்த அந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. அடித்தளம் 4 அடி மட்டுமே போட்டுள்ளதால், அருகில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணி தொடங்கியவுடன், சம்பந்தப்பட்ட கட்டடம் சாய்ந்துள்ளது. பாதுகாப்பை கருதி சாய்ந்த கட்டடத்தை இடிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
சாய்ந்த கட்டடத்தின் உரிமையாளர் ஹுக்கும்சிங்கிற்கும், புதிய கட்டடத்தை கட்டத் தொடங்கிய குமரவேலு என்பவருக்கும் விதிமுறைகளை மீறியது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மகாதேவப்புரா மண்டல இணை ஆணையர் ஷோபாசங்கர் தெரிவித்தார்.
கட்டடம் கட்டுவதற்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநகராட்சி தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், விதிமுறைகளை பின்பற்றாமல் பலர் கட்டடங்கள் கட்டிவருவதாகவும், ஏற்கெனவே கட்டுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்ற கட்டடங்கள் எந்த நேரத்தில் சாயிமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.
எனவே, மாநகராட்சி பகுதிவாரியாக அதுபோன்ற கட்டடங்களின் உறுதியைக் கண்டறிந்து, பாதுகாப்பு இல்லாத கட்டடங்களை இடித்து தள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.