குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்
By DIN | Published On : 19th May 2019 09:21 AM | Last Updated : 19th May 2019 09:21 AM | அ+அ அ- |

கர்நாடகத்தில் குந்தகோல், சின்சோளி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தார்வாட் மாவட்டத்தின் குந்தகோல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சி.எஸ்.சிவள்ளி, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இவர் எதிர்பாராதவிதமாக மார்ச் 22-இல் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதேபோல, கலபுர்கி மாவட்டத்தின் சின்சோளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த உமேஷ்ஜாதவ், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை மார்ச் 4-இல் ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து பாஜக வேட்பாளராக உமேஷ்ஜாதவ் போட்டியிடுகிறார்.
இதன் காரணமாக காலியாக உள்ள குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது.
இந்த இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3,83,313 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் 1,96,548, பெண்கள் 1,86,744, மூன்றாம் பாலினத்தார் 21, அரசு ஊழியர்(அஞ்சல் வழிவாக்காளர்கள்) 138 பேர் அடங்குவர்.
குந்தகோல் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 1,89,444 வாக்காளர்களும்(ஆண்கள்-97,501, பெண்கள்-91,938, மூன்றாம் பாலினத்தவர்-5), சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 1,93,869 வாக்காளர்களும்(ஆண்கள்-99,047, பெண்கள்-94,806, மூன்றாம் பாலினத்தவர்-16) உள்ளனர்.
வேட்பாளர்கள்: இரு தொகுதிகளிலும் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சின்சோளி தொகுதியில் 15 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 17 வேட்பாளர்களும், குந்தகோல் தொகுதியில் 6 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
சின்சோளி தொகுதியில் உமேஷ்ஜாதவின் மகன் அவினாஷ் ஜாதவ், பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக சுபாஷ் ராத்தோட், பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளராக கெளதம் பொம்னள்ளி, இந்துஸ்தான் ஜனதாகட்சி வேட்பாளராக ஸ்ரீவெங்கடேஷ்வரா மகாசுவாமிகள், பகுஜன்முக்தி கட்சி வேட்பாளராக மாருதி கஞ்சகிரி, சர்வ ஜனதா கட்சி வேட்பாளராக விஜய்ஜாதவ், சுயேச்சை வேட்பாளர்களாக கே.தீபா, தொட்டமணி நாகேந்திரப்பா, பிரவீண்குமார் பெல்லுந்தகி, பாக்யா சந்தோஷ்தல்வார், மல்லிகார்ஜுன்கஜாரே, ரமேஷ்பீம்சிங்சவாண், போவிவிஷ்வேஸ்வரையா, சாம்ராவ் கங்காராம், சாம்ராவ் சந்திரப்பா தெகல்மாடி, சாம்ராவ் மல்லேஷப்பா ஹேரூர், ஹனுமந்த ராமநாடக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
குந்தகோல் தொகுதியில் மறைந்த அமைச்சர் சிவள்ளியின் மனைவி குசுமவதி காங்கிரஸ் வேட்பாளராகவும், சிக்கன்னகெளடர் பாஜக வேட்பாளராகவும் களத்தில் உள்ளனர். சுயேச்சை வேட்பாளர்களாக பண்டிவாட் ஈஸ்வரப்பா ஷெட்டெப்பா, துலசப்பா கரியப்பா தாசர், ராஜு அனந்த்ச நாயக்வாடி, கோனி ஷைலாசுரேஷ், சித்தரப்ப சத்தியப்பா கோடி, சோமண்ணா சென்னபசப்பா மேட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மஜத ஆதரவு அளித்துள்ளது. எனவே, இரு தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ்- பாஜக நேரடி போட்டி: இரு தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. அதேபோல, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க இரு தொகுதிகளிலும் வெல்ல வேண்டிய அரசியல் கட்டாயத்தில் பாஜக உள்ளது. எனவே, காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை: இரு தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் மே 23-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்
இரு தொகுதிகளிலும் 455 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குந்தகோல் தொகுதியில் 214 வாக்குச் சாவடிகளும், சின்சோளி தொகுதியில் 241 வாக்குச் சாவடிகளும் உள்ளன.
வாக்குச் சாவடிகளில் மொத்தத்தில் 375 சக்கர நாற்காலிகள், 455 பூதக்கண்ணாடிகள், 215 வாகனங்கள், 1 மொழிப் பெயர்ப்பாளர், 259 உதவியாளர்கள், 465 தன்னார்வலர்கள் போன்ற வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் குடிநீர், கழிவறை, மின்சாரம், சாய்வு நடைபாதை போன்ற குறைந்தபட்ச வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வாக்குச் சாவடிகள் 2 அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு அழைத்துவர சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் குந்தகோல் தொகுதியில் 380 மின்னணு வாக்கு இயந்திரங்களும், 268 வாக்கு அலகுகளும், 380 வாக்கு ஒப்புகைச்சீட்டு அலகுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல, சின்சோளி தொகுதியில் 671 மின்னணு வாக்கு இயந்திரங்களும், 427 வாக்கு அலகுகளும், 536 வாக்கு ஒப்புகைச்சீட்டு அலகுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் பணியில் மொத்தம் 1,016 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சின்சோளி தொகுதியில் 570 பேர், குந்தகோல் தொகுதியில் 446 பேர் அடக்கம். 396 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் மொத்தம் 121 வாகன ஊழியர்கள், 90 பிற ஊழியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
வாக்காளர் பட்டியல்: வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் காண www.ceokarnataka.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். "சுனாவனா' என்ற செல்லிடப்பேசி செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடி, வேட்பாளர் விவரங்கள், மாற்றுத் திறனாளிகள் வாகன முன்பதிவு போன்ற தகவல்களை பெறலாம். தேர்தல் தொடர்பான புகார்களையும் இந்த செயலி வழியாக பதிவுசெய்யும் வசதி உள்ளது.
வாக்காளர்கள் கவனத்துக்கு...
வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் காண www.ceokarnataka.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். "சுனாவனா' என்ற செல்லிடப்பேசி செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடி, வேட்பாளர் விவரங்கள், மாற்றுத் திறனாளிகள் வாகன முன்பதிவு போன்ற தகவல்களை பெறலாம். தேர்தல் தொடர்பான புகார்களையும் இந்த செயலி வழியாக பதிவுசெய்யும் வசதி உள்ளது.
சான்று ஆவணங்கள்: வாக்காளர்கள் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பின்வரும் சான்று ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொண்டு சென்றால் மட்டுமே வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய-மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, வங்கி/அஞ்சலகம் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய சேமிப்புக் கணக்கு புத்தகம், நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்தில் ரிஜிஸ்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா வழங்கிய ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட வேலை அட்டை, தொழிலாளர் நலத்துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீடு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் வழங்கியுள்ள அலுவலக அடையாள அட்டைகள் மற்றும் ஆதார் அட்டை ஆகிய 11 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.