வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகே தடையுத்தரவு பிறப்பிப்பு
By DIN | Published On : 19th May 2019 09:18 AM | Last Updated : 19th May 2019 09:18 AM | அ+அ அ- |

பெங்களூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அருகே 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகர எல்லைக்குள்பட்ட வட பெங்களூரு, தென் பெங்களூரு, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப். 18-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதை முன்னிட்டு, வாக்குகளை எண்ணும் மையங்களை சுற்றி 144 தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் அரண்மனை சாலையில் உள்ள மெளன்ட்கார்மேல் கல்லூரி வளாகம், விட்டல் மல்லையா சாலையில் உள்ள புனித ஜோசப் இந்திய உயர்நிலைப் பள்ளி வளாகம், ஜெயநகரில் 4-ஆவது "டி' பிளாக்கில் உள்ள எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரி வளாகத்தைச் சுற்றி மே 23-ஆம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தடையுத்தரவு அமலில் இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் இப்பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் கூட்டமாக சேரக் கூடாது. இறுதி ஊர்வலம் மற்றும் திருமண ஊர்வலங்கள் தவிர வேறுவகையான ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை. ஆயுதங்கள், தடிகள், கத்திகள், ஈட்டிகள் உள்ளிட்ட வன்முறைக்கு வித்திடும் எந்தவொரு ஆயுதங்களையும் கொண்டுவர தடை விதிக்கப்படுகிறது. வெடிக்கும் பொருள்களை வெடிக்க வைப்பது, கல்லெறிவது போன்றவற்றுக்கு அனுமதியில்லை.
முழக்கமிடுவது, பாடுவது, இசைப்பது, உருவ பொம்மைகளை கொண்டுவருவது அல்லது எரிப்பது, புகைப்படங்களை காண்பிப்பது போன்ற எவற்றையும் அனுமதிக்க இயலாது. இந்த உத்தரவை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.