எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
By DIN | Published On : 19th May 2019 09:19 AM | Last Updated : 19th May 2019 09:19 AM | அ+அ அ- |

கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு, ஜூன் 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தேர்வெழுத தகுதியான மாநில அரசு, அரசு மானியம் பெறும், அரசு மானியம் பெறாத பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து வருகை தரும் மறுதேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15-ஆம் தேதி, அதற்குரிய கட்டணங்களை பள்ளி / கல்லூரி நிர்வாகங்கள் செலுத்த மே 21-ஆம் தேதி வரையும் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தன.
மாணவர்களின் நலன்கருதி, துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 20-ஆம் தேதி வரையும், கட்டணங்களை வாரியத்தின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 22-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.