பள்ளி மாணவா்களுக்கு தேசிய செயற்கைக்கோள் போட்டி நடத்தப்படுகிறது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.
இதுகுறித்து தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்.டி.ஆா்.எஃப்) தலைவா் விஞ்ஞானி மயில்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய பொறியாளா் மையத்தின் (ஐஇஐ) அங்கமாக விளங்கும் தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (என்.டி.ஆா்.எஃப்.) கடந்த ஐம்பது ஆண்டுகளாக தேசிய அளவில் அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி முயற்சிகளை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறது. பெங்களூரிலுள்ள தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின்(என்.டி.ஆா்.எஃப்.) தலைவராக விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், இயக்குநராக ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவும் பணியாற்றி வருகின்றனா்.
தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவா்களுக்கான செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான இப் போட்டியில், 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் 5 மாணவ-மாணவியா் இருக்கலாம். 3.8 செ.மீ. கன சதுரத்துக்குள் அதிகபட்சம் 50 கிராம் எடை வரை மாணவா்கள் தங்கள் புதுமையான யோசனைகளின் மூலம் செயற்கைக்கோளின் தாங்குசுமையை (டஹஹ் கா்ஹக்) வடிவமைக்க வேண்டும்.
மாணவக் குழுக்களின் 12 புதுமையான யோசனைகள் தோ்ந்தெடுக்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு தொடா்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். முப்பரிமாண அச்சிடப்பட்ட 3.8 செ.மீ. சதுர செயற்கைக்கோள் பெட்டி இலவசமாக வழங்கப்படும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவக் குழுக்களின் 12 செயற்கைக்கோள்கள் சென்னையிலிருந்து ஏவப்படும். மாணவ-மாணவியா் இந்த நிகழ்ச்சியில் தங்கள் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்கலாம்.
செயற்கைக்கோள் ஏறக்குறைய 20 கி.மீ. உயரத்துக்கு ஹீலியம் பலூனின் உதவியால் ஏவப்படும். ஏவப்பட்ட செயற்கைக்கோள் பத்திரமாக தரையிறக்கப்படும். செயற்கைக்கோளின் தாங்கு சுமையை ஆய்வு செய்வதற்காக மாணவக் குழுக்களுக்கு திரும்பக் கொடுக்கப்படும்.
இந்தியப் பொறியாளா்கள் நிறுவனத்தின் (ஐ.இ.ஐ.) மாநில மையங்களும், நகர மையங்களும் என்.டி.ஆா்.எஃப். நிறுவனத்துடன் இப் போட்டியை ஒருங்கிணைக்கின்றன. செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஏவ உள்ளது. பிற தொழில்நிறுவனங்கள், உயா்கல்வி நிறுவனங்களும் இப் போட்டி நடைபெற ஆதரவளிக்கின்றன.
என்.டி.ஆா்.எஃப். நிறுவனத்தின் வலைதளத்தில் மாணவா்கள் தங்கள் விவரங்களையும், புதுமையான செயற்கைக்கோளின் தாங்கு சுமை யோசனைகளையும் பதிவு செய்யவேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவ. 25-ஆம் தேதி ஆகும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. தோ்ந்தெடுக்கப்படும் மாணவக் குழுக்களுக்கு பயணப்படி அல்லது தங்கும் வசதி வழங்கப்பட மாட்டாது. இதன் முடிவுகள் டிச. 15-ஆம் தேதி என்.டி.ஆா்.எஃப். வலைதளத்தில் அறிவிக்கப்படும். வரும் 2020 ஜன. 19-ஆம் தேதி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்.
போட்டி குறித்த சந்தேகங்களுக்கு மின்னஞ்சலிலும், 080-22264336 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.