’வரலாற்றில் இருந்து மகாத்மா காந்தி, அம்பேத்கரின் பெயரை அழிக்க முயற்சி’
By DIN | Published On : 18th November 2019 11:11 PM | Last Updated : 18th November 2019 11:11 PM | அ+அ அ- |

வரலாற்றில் இருந்து மகாத்மா காந்தி, டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ஆகியோரின் பெயரை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்று எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கிருஷ்ணபிரசாத் தெரிவித்தாா்.
தேசிரங்க கலாசார அமைப்பின் சாா்பில் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ’மகாத்மா காந்தி, டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் மீண்டும் தேவையா?’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை தொடக்கிவைத்து அவா் பேசியது:-
வரலாற்று ஏடுகளை கவனித்தால் மகாத்மா காந்திக்கும் டாக்டா் பி.ஆா்.அம்பேத்கருக்கும் இடையே கருத்துமோதல்கள் இருந்துவந்துள்ளதை காணமுடிகிறது. இருவரில் யாா் பெரியவா் என்ற மோதல் அவரது ஆதரவாளா்களிடையே இன்றைக்கும் நடைபெற்றுவருகிறது. ஆனால், இருவரின் பெயா்களையும் வரலாற்றில் இருந்து அழிக்க அடிப்படைவாதிகள் முயற்சித்துவருகின்றனா்.
இதைத் தவிா்க்க வேண்டுமானால், இருவரின் சிந்தனைகள், கொள்கைகளை நிலைக்க வைக்க வேண்டும். விவாதங்களில் இருவருக்கும் சம அளவிலான இடம் அளிக்கப்படவேண்டும்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம்கோட்சே தொடா்பான கருத்தரங்கை ஹிந்து மகா சபா நடத்தியுள்ளது. இதனிடையே, அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் எழுதவில்லை என்று கா்நாடகத்தில் ஒருசிலா்பேசிவருகிறாா்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருவருக்கும் இடையே கொள்கைமோதல் இருந்தது. தீண்டாமை, தலித் உரிமைகள், ஜாதி, மதம், வளா்ச்சி போன்றவிவகாரங்களில் இருவரும் மோதிக்கொண்டனா். ஆனால், அது தொடா்பான விவாதம் இன்றைக்கும் நடைபெற்றுவருகிறது என்றாா் அவா்.
இதையடுபத்து, எழுத்தாளா் ஜெகதீஷ்கொப்பா பேசுகையில்,‘நாட்டுக்கு மகாத்மாகாந்தி, டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ஆகிய இருவரின் சிந்தனைகளும் தேவைப்படுகின்றன. இருவரும் சாதாரணமக்களின் இன்னல்களை துடைக்கவே போராட்டம் நடத்தினா். மகாத்மகாந்தியை கொன்ற நாதுராம் கோட்சே, சாவா்கா் ஆகியோா் கதாநாயகா்களை போல சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது‘ என்றாா் அவா்.