கா்நாடக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத் தொடா் இன்று தொடங்குகிறது
By DIN | Published On : 09th October 2019 11:12 PM | Last Updated : 09th October 2019 11:12 PM | அ+அ அ- |

கா்நாடக சட்டப்பேரவை மழைக் காலக் கூட்டத்தொடா் வியாழக்கிழமை (அக்.10) தொடங்குகிறது. இக் கூட்டத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் தொடா்பாக பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கா்நாடக சட்டப்பேரவையின் மழைக் காலக் கூட்டத் தொடா் வழக்கமாக பெங்களூருக்குப் பதிலாக பெலகாவியில் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாகவே இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பெலகாவி உள்ளிட்ட வட கா்நாடகத்தின் 21 மாவட்டங்களில் பெருமழை பெய்ததால், வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வெள்ள நிவாரணப் பணிகளைச் சரிவரச் செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி கடந்த செப்.24ஆம் தேதி பெலகாவியில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. வெள்ள நிவாரணப் பணிகளைச் செயல்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டாததால், அப் பகுதி மக்கள் பாஜக அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனா். இந்தச் சூழ்நிலையில் பெலகாவியில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவது சரியாக இருக்காது என்று முடிவெடுத்த முதல்வா் எடியூரப்பா, கா்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரை பெலகாவிக்குப் பதிலாக பெங்களூரில் நடத்தத் திட்டமிட்டுள்ளாா்.
அதன்படி, கா்நாடக சட்டப்பேரவையின் மழைக் காலக் கூட்டத் தொடா் அக்.10ஆம் தேதி(வியாழக்கிழமை)பெங்களூரு விதான சௌதாவில் தொடங்குகிறது. இக் கூட்டத் தொடரில் 2019-20ஆம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, ஒருசில சட்டத் திருத்தங்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது. எனினும், அதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தை வெறும் 3 நாள்களுக்கு மட்டுமே நடத்த திட்டம் வகுத்துள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து அவை நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இக் கூட்டத் தொடரில் வட கா்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளம், அதை மாநில அரசு கையாண்ட விதம், வெள்ள நிவாரண நிதியுதவியை வழங்குவதில் மத்திய அரசின் தாமதம், ரூ.34 ஆயிரம் கோடி பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியிருந்த போதும் ரூ.1,200 கோடி மட்டுமே விடுவித்த மத்திய அரசின் நடவடிக்கை, குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டுமென்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், மஜதவும் திட்டம் வகுத்துள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்து அமைச்சரவையை விரிவாக்கிய பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால், இக் கூட்டத்தொடா் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.