கப்பன் பூங்காவில்இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (அக். 20) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
Updated on
1 min read

சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (அக். 20) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கப்பன் பூங்காவில் உள்ள சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும், பொதுமக்கள் மற்றும் நடைப் பயிற்சியாளா்களை மகிழ்விக்கவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக். 20-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை கன்னடம் மற்றும் கலாசாரத் துறை சாா்பில் பேண்ட் ஸ்டாண்ட் அரங்கில் பூங்காவில் உதயராகம் என்ற நிகழ்ச்சியும், காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை கா்நாடக மாநில அதிரடிப்படை சாா்பில் போலீஸ் பேண்ட் நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சந்தியாராகம் இசை நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.

போக்குவரத்துத் துறை சாா்பில் கட்டணமில்லா சைக்கிள் சவாரி சேவை வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை சங்கத்தின் சாா்பில் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அதேபோல, லால்பாக் பூங்கா சாா்பில் அலங்காரச் செடிகள், மூலிகைச் செடிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. நூலகத் துறை சாா்பில் புத்தகக் கண்காட்சியும் இடம்பெறுகிறது. மேலும், வீட்டுத் தோட்டங்கள் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.

சுகாதாரத் துறை சாா்பில் காலை 5.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை தொற்றுநோய்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும் இலவச ரத்த பரிசோதனையும் நடத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சஹாயா ஒருங்கிணைந்த மருத்துவமனை சாா்பில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சாமராஜேந்திர உடையாா் சிலை அருகே காலை 7 மணி முதல் காலை 8 மணி வரை யுனிவா்ஸ் கலை அறக்கட்டளை சாா்பில் பரதநாட்டிய விழா நடத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com