புகைப்படக் கலைஞர்களின் உறைந்த நினைவுகள் கண்காட்சி
By DIN | Published On : 01st September 2019 05:40 AM | Last Updated : 01st September 2019 05:40 AM | அ+அ அ- |

பெங்களூரில் நடைபெற்று வரும் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் உறைந்த நினைவுகள் புகைப்படக் கண்காட்சி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமூக ஊடக காலத்தில் பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில், உலக புகைப்படக் கலை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பெங்களூரு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், பெங்களூரில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் ஆக. 29-ஆம் தேதி முதல் "உறைந்த நினைவுகள்' என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
செப். 1-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட பத்திரிகை புகைப்படக் கலைஞர்களின் 152 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரசியல், விளையாட்டு, வாழ்க்கை முறை, சமூக முரண்பாடுகள், நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டி.வினோத்குமார், நாகராஜ் கடேகல், பி.பண்டரிநாத், பி.என்.ஸ்ரீராம், ஆல்ஃப்ரெட் டென்னிசன், ஜேம்ஸ், வீரமணி, சுதாகர், முத்து, ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ஆயிரம் எழுத்துகளாலும் விவரிக்க முடியாத விவரங்களை புகைப்படங்கள் உரக்க உரைக்கும் என்று கூறும் புகைப்படக் கலைஞர் டி.வினோத்குமார், "இது ஆண்டுதோறும் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியாகும். சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகளை வழங்கினாலும், அவற்றை பத்திரிகை புகைப்படக் கலைஞரின் பார்வையில் புகைப்படங்களாக விரியும் காட்சிகளுடன் ஒப்பிட இயலாது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு இடையே பத்திரிகைகளில் வெளியாகும் புகைப்படங்கள் மக்களை கவரத்தான் செய்கின்றன' என்றார்.
இக்கண்காட்சியை இதுவரை 2 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளதாக சங்கத் தலைவர் மோகன்குமார் தெரிவித்தார்.