சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டம்
By DIN | Published On : 02nd September 2019 03:47 AM | Last Updated : 02nd September 2019 03:47 AM | அ+அ அ- |

சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சி.டி.ரவி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூரில் ஆட்சியர் அலுவகத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா மேம்பாடு குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பாஜக அரசு, சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கித் தரும். குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பதோடு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.
மேலும், சிக்மகளூரில் அய்யனகெரே எரி, பசவனஹள்ளி ஏரி, ஹிரேகொளகெரே கோட்டை ஏரி உள்ளிட்டவற்றை சீரமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
கல்லத்திகிரி, அம்ருத்தப்புரா, சிரிமனே நீர்வீழ்ச்சி, ஹொன்னமனஹள்ளி, மானிக்கியதார ஆகிய பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக்க திட்ட அறிக்கையை 15 நாள்களுக்குள் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.