வெள்ளத்தால் ரூ.50 ஆயிரம் கோடி பொருள்கள் இழப்பு: அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.50 ஆயிரம் கோடி பொருள்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
Updated on
1 min read

கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.50 ஆயிரம் கோடி பொருள்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்புகளை ஆய்வுசெய்தபோது ஆரம்பக்கட்டத்தில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பாகியிருக்கலாம் என்று தெரியவந்தது.  ஆனால், வெள்ளநீர் படிப்படியாக வடிந்துவரும் நிலையில் பொருள்சேதத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியாக  உயரலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்ட நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரம் அளித்திருக்கிறோம். இதுவரை 48 லட்சம் பேருக்கு இது அளிக்கப்பட்டுள்ளது.  மறுவாழ்வு மையத்தில் வசிப்போருக்கு கூடுதலாக உணவுத் தொகுப்பு, மருந்துத் தொகுப்பு, கழிப்பறைத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.  உணவுத் தொகுப்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை,  உப்பு உள்ளிட்டவை இருக்கும்.  வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்,  வீடு பழுந்தடைந்தோருக்கு ரூ.1 லட்சம் அளிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.  குடகு மாவட்டத்தில்  ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 400 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது நவம்பர் மாதம் பயனாளிகளுக்குஅளிக்கப்படும்.  ஆற்றுப்படுகையில் வசிப்போரில் பலர் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.  இப்படிப்பட்டமக்களை மறுகுடியேற்றம் செய்யவிருக்கிறோம்.  வீடுகளை இழந்தோர் உடனடியாக வீடு கட்ட இயலாதநிலையில் வாடகை வீட்டில் தங்கினால் மாதம் ரூ.5 ஆயிரம் நிதி உதவிஅளிக்கப்படும்.  ஒருவேளை வாடகை வீடு அல்லாமல் தனியாக வசிக்க விரும்பினால், கொட்டகை அமைக்க ரூ.50 ஆயிரம் தருகிறோம்.  வீடுகளை தவிர, சாலை, பாலம் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.  இவற்றை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.  செப்.7ஆம் தேதி பெங்களூருக்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதிஉதவியை கேட்போம்.  நிதி உதவி அடுத்தமாதம் கர்நாடகத்திற்கு கிடைக்கும் நம்பிக்கையுள்ளது.
அடுத்த கல்விஆண்டு முதல் பள்ளி தொடங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு சீருடை, பாடநூல்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.  அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு  பாடநூல்கள் அனைத்தும் இருமொழிகளில் இருக்கும்.  மொழிப் பாடத்தை தரமாக சொல்லிக் கொடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com