டி.கே.சிவக்குமார் கைது :பின்னணியில் பாஜக இல்லை: துணை முதல்வர் அஸ்வத்நாராயணா
By DIN | Published On : 11th September 2019 10:15 AM | Last Updated : 11th September 2019 10:15 AM | அ+அ அ- |

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது பின்னணியில் பாஜக இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணா தெரிவித்தார்.
தும்கூரு மாவட்டம், திப்டூர் வட்டம், நொனவினக்கெரேயில் உள்ள காலபைரேஸ்வரா சமுதாயக் கூடத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்ற அவர், முன்னதாக தும்கூரு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டத்தின் முன் அனைவரும் சமம். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் கைது செய்தனர். தவறு செய்யவில்லை என்றால், அவர் விடுதலையாகி வருவார்.
ஆனால், இந்த விவகாரத்தை சிலர் அரசியலாக்கி வருகின்றனர். நமது நாட்டின் சட்டம் செல்லவந்தர்களுக்கு மட்டுமின்றி, ஏழைகளுக்கும் ஒன்றுதான். டி.கே.சிவக்குமார் கைது பின்னணியில் பாஜக இல்லை. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார். பேட்டியின் போது, எம்எல்ஏ மசாலே ஜெயராம், கொண்டோஜி விஸ்வநாத், கங்கம்மா, வி.பி.சுரேஷ், சோமண்ணா, வெங்கட்ராம், மிதுன் அனுமந்தேகெளடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.