"தசரா விழாவில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்'
By DIN | Published On : 11th September 2019 10:16 AM | Last Updated : 11th September 2019 10:16 AM | அ+அ அ- |

தசரா விழாவில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
மைசூரு தசரா விழாவிற்கு பொறுப்பு வகிக்கும் இவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
சர்வதேச புகழ் வாய்ந்த மைசூரு தசரா விழா செப். 29ஆம் தேதி தொடங்கி, அக்.8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நமது கலாசாரம், பண்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும், இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் அனைத்து மாச்சரியங்களையும், கட்சி பேதங்களையும் மறந்து அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.
மைசூரு மன்னர் தொடங்கிய தசரா விழாவை, எந்த குறையும் இல்லாமல் மாநில அரசு முன்னெடுத்து செல்கிறது. இதில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளும் இதில் பங்கொண்டு, தசரா விழாவை சிறப்பிக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது, எம்.எல்.ஏ அஸ்வின்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பரிமளா ஷியாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.