முதல்வர் எடியூரப்பாவைவிட பாஜக பெரியது: அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

முதல்வர் எடியூரப்பாவைவிட பாஜக பெரியது என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.


முதல்வர் எடியூரப்பாவைவிட பாஜக பெரியது என்று ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
இது குறித்து சிவமொக்காவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கட்சியை மீறி எவராலும் வளர முடியாது. கட்சியைக் காட்டிலும் தன் வளர்ச்சியை முன்வைத்துச் செயல்பட்டால்,  தற்காலிக வெற்றி கிடைக்கலாம்.  ஆனால், அது நீண்டநாட்களுக்கு நிலைக்காது.  ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானதல்ல.  முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா,  குமாரசாமி, நான் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும்.  கட்சியை மீறி தான் பெரியவன் என்று கருதி செயல்பட்டதால்தான் சித்தராமையா வளர்த்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பறிபோனதோடு,  அவரும் தோல்வி அடைந்தார். இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் நல்லபாடம். 
கோலார் மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பாவைத் தோற்கடிக்க முன்னாள் பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் வேலை செய்தார்.  அப்படிப்பட்ட ரமேஷ்குமாரை பக்கத்தில் அமரவைத்துக்கொண்டு கட்சிக் கூட்டத்தை நடத்தினால் யாருக்குத் தான் கோபம் வராது.  கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கு காங்கிரஸ்,  பாஜக, மஜத உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.  அப்படி அளித்தால் அது பொது வாழ்க்கையை கேலி செய்வது போலாகும்.  கட்சியை அலட்சியமாகக் கருதியதன் விளைவை சித்தராமையா அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.  ஆட்சியில் இருந்தபோது கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்பது முக்கியம். அப்போதுதான் கட்சியுடன் நாமும் வளரமுடியும்.  இதை சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் புரிந்துகொள்ள வேண்டும்.  கட்சியைவிட பெரியவன் என்று யாராவது நினைத்தால், அது அவர்களை மட்டுமல்ல, அந்த கட்சியையும் அழித்துவிடும்.  மேலும் அரசியல் ரீதியான விளைவுகளுக்கும் காரணமாகிவிடும்.  கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடுவதில்லை.  கட்சியின் எல்லையை மீறி யாராலும் வளரமுடியாது.
அமைச்சரவையில் உள்ளோருக்கு தன்னிடம் இருந்த துறைகளை முதல்வர் எடியூரப்பா பிரித்துக் கொடுத்திருக்கிறார்.  14 அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பட்டுள்ளது. இந்து துறையை ஏற்பது குறித்து முதல்வர் எடியூரப்பாவுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com