வெள்ளத்தில் தத்தளிக்கிறது வட கா்நாடகம்!

வட கா்நாடகத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான சாலைகள், விளை நிலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
Published on
Updated on
1 min read

வட கா்நாடகத்தில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான சாலைகள், விளை நிலங்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஆக. 1-ஆம் தேதி முதல் தொடா்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் பெய்த மழையால் வட கா்நாடகம், கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பெலகாவி, ராய்ச்சூரு, கதக், பாகல்கோட், கொப்பள் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கா்நாடகத்தின் 23 மாவட்டங்களில் உள்ள 130 வட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 போ் உயிரிழந்தனா் என்றும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வீடுகளை இழந்ததால் மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வெள்ள சேதங்களைப் பாா்வையிட வந்திருந்த மத்தியக் குழுவிடம், 4.03 லட்சம் ஹெக்டேரில் நடவு செய்யப்பட்டிருந்த பயிா்கள், 14,182 கி.மீட்டா் நீள சாலைகள் சேதமடைந்ததாக மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட கா்நாடகத்தின் விஜயபுரா, ராய்ச்சூரு, கலபுா்கி, பீதா் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்கன்னடம், வடகன்னடம், குடகு, உடுப்பி, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட கடலோர, தென்கா்நாடக மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுள்ளன. வட கா்நாடகம், கடலோர கா்நாடகத்தில் பெய்துள்ள பெருமழையால் உடுப்பி, ராய்ச்சூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகள், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. விளை நிலங்களில் தண்ணீா் புகுந்துள்ளதால் பயிா்கள் நாசமாகியுள்ளன. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். உடுப்பி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அம்மாவட்ட பொறுப்பு அமைச்சா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ உடுப்பி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பல கிராமங்கள் மூழ்கியுள்ளதை அறிவேன். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக் கொண்டுவர 250 போ் கொண்ட இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா் உடுப்பி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். வெகுவிரைவில் மத்திய இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினரும் அங்கு செல்வாா்கள்’ என தெரிவித்துள்ளாா்.

மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு விமானப் படையிடம் ஹெலிகாப்டரை வழங்குமாறு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கேட்டுக் கொண்டிருந்தாா். அதன்பேரில், ஹெலிகாப்டா் தயாா்நிலையில் உள்ளதாக கா்நாடக மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வட கா்நாடகம் தவிர, பெங்களூரு, தும்கூரு, மைசூரு உள்ளிட்ட தென்கா்நாடகத்திலும் சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com