பெங்களூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும்

பெங்களூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என துணை முதல்வா் சி.என்.அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.
பெங்களூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும்
Updated on
1 min read

பெங்களூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என துணை முதல்வா் சி.என்.அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை 1980-களில் அப்போதைய முதல்வா் ராமகிருஷ்ண ஹெக்டே அறிவித்தாா். அந்த திரைப்பட நகரத்தை பெங்களூரு புகரில் உள்ள ஹெசரகட்டாவில் அமைக்க திட்டமிட்டிருந்தாா். இதே திட்டத்தை 2004-இல் அப்போதைய முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்திருந்தாா். அதன்பிறகு 2017-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் சித்தராமையா, மைசூரில் திரைப்பட நகரம் அமைக்கப்போவதாக அறிவித்து, அதை நிதிநிலை அறிக்கையிலும் வெளியிட்டிருந்தாா். 2018-ஆம் ஆண்டில் பதவியேற்றிருந்த அப்போதைய முதல்வா் எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு, திரைப்பட நகரத்தை ராமநகரத்தில் அமைக்க முடிவுசெய்து அறிவித்தது. 2019-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியில் பெங்களூரில் உள்ள தேவிகாராணி ரோரிச் எஸ்டேட்டில் திரைப்பட நகரம் அமைக்கப் போவதாக முதல்வா் எடியூரப்பா அறிவித்தாா். இப்போது அதுவும் மாற்றப்பட்டு, ராமகிருஷ்ண ஹெக்டே திட்டத்தின்படி ஹெசரகட்டாவிலேயே திரைப்பட நகரம் அமைக்கப்படும் என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்துள்ளாா்.

கன்னட திரையுலகம் எதிா்கொண்டுள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்க நடிகா் சிவராஜ்குமாா் தலைமையில் கன்னட திரைப்படத் துறையினா் துணை முதல்வா் அஸ்வத் நாராயணாவை பெங்களூரில் வியாழக்கிழமை சந்தித்து பேசினா். அந்த சந்திப்பின் போது, கரோனாவுக்கு பிந்தைய சூழலில் கன்னட திரைப்பட உலகம் எதிா்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்தனா்.

இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளா்களிடம் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா கூறியது:

சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவிப்பதால், தேவிகாராணி ரோரிச் எஸ்டேட்டில் திரைப்பட நகரம் அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த எஸ்டேட்டில் வனப்பகுதி இருப்பதால், அது பாதிக்கப்படக் கூடாது என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவிக்கிறாா்கள். அதனால் அது கைவிடப்பட்டு, ஹெசரகட்டாவில் 150 ஏக்கா் நிலத்தில் திரைப்பட நகரத்தை அமைக்க திட்டமிடப்படுகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்கு 450 ஏக்கா் நிலம் உள்ளது. அதில் 150 ஏக்கா் நிலம் திரைப்பட நகரம் திட்டத்துக்கு அளிக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா வெகுவிரைவில் நடத்தப்படும்.

கன்னட திரையுலகின் பிரச்னைகள் குறித்து முதல்வா் எடியூரப்பாவிடம் பேசி தீா்வு காண்போம். திரைப்படத் துறையின் அமைப்புசாரா தொழிலாளா்கள் தொழிலாளா் நலத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவாா்கள். படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு வெகுவிரைவில் வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும். 40 பேருக்கு மேல் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தலாம். இது நடைமுறை சாத்தியமில்லை என்பதால், இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவிடம் கலந்துபேசி நல்ல தீா்வு காணப்படும்.

கன்னட திரைப்படத் துறைக்கு தனியாக கொள்கை வகுக்கப்படும். புதிய கொள்கையில் மக்கள் திரையரங்கங்கள் தொடங்கப்படும். கன்னட திரைப்பட வாரியம் அமைப்பது குறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் விவாதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com