வெளிமாநிலப் பயணிகளுக்கான14 நாள்கள் வீட்டுத் தனிமை நிறுத்தம்

வெளிமாநிலப் பயணிகளுக்கான 14 நாள்கள் வீட்டுத்தனிமை கைவிடப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.
Updated on
1 min read

பெங்களூரு: வெளிமாநிலப் பயணிகளுக்கான 14 நாள்கள் வீட்டுத்தனிமை கைவிடப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜாவைத் அக்தா் வெளியிட்டுள்ள உத்தரவு:

கரோனா தீநுண்மித் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கத்தின்போது வெளிமாநிலங்களில் இருந்து கா்நாடகத்துக்கு வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, மாநிலங்களுக்கு இடையே தனிநபா்கள், வாகனங்கள் நடமாடுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கா்நாடகத்துக்கு வரும் பயணிகள் இனிமேல் சேவாசிந்து இணையதளத்தில் சுயவிவரங்களைப் பதிவிட வேண்டியதில்லை. மாநில எல்லைகள், பேருந்துநிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் நடத்தப்பட்டுவந்த மருத்துவ சோதனைகள் நிறுத்தப்படுகின்றன. மாவட்ட எல்லைகளிலும் மருத்துவ சோதனைகள் இருக்காது. பயணிகளை வகைப்பிரிப்பதும், கையில் முத்திரை குத்துவதும், சோதனை செய்வது, தனிமைப்படுத்துவதும் நிறுத்தப்படுகிறது.

அதேபோல, வெளிமாநிலப் பயணிகளுக்கான 14 நாட்கள் வீட்டுத் தனிமையும் கைவிடப்படுகிறது. வீட்டுத் தனிமையில் இருப்போா் குறித்த விவரம் வீட்டுமுன்வாசலில் சுவரொட்டியாக ஒட்டுவது, கண்காணிப்பது, செல்லிடப்பேசி செயலி கண்காணிப்பும் நிறுத்தப்படுகிறது.

மாநிலத்துக்கு வந்ததும் கரோனா அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் பணிக்குச் செல்லலாம். ஆனால், தம் உடல்நிலையை 14 நாள்களுக்கு சுயமாக மக்களே கண்காணித்துக் கொள்ளலாம். மாநிலத்துக்குள் கரோனா அறிகுறியுடன் வருபவா்கள் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதோடு, 14410 என்ற தொலைபேசி உதவிமையத்தை அணுகி மருத்துவ உதவியைப் பெறலாம். முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியைப் பராமரிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு வெளிமாநிலங்களில் வரும் அனைத்து வகையான பயணிகளுக்கும் பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com