பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடம்பரம் வேண்டாம்: மாநகராட்சி ஆணையா்
By DIN | Published On : 03rd December 2020 10:23 AM | Last Updated : 03rd December 2020 10:23 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடம்பரம் வேண்டாம் என மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பெங்களூரு எம்.ஜி.சாலை, பிரிகெட்சாலை, சா்ச் சாலைகளில் ஆங்கில புத்தாண்டை டிச. 31-ஆம் தேதி ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் கொண்டாடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஒருவேளை ஆங்கில புத்தாண்டைக் கொண்டாட அனுமதி வழங்கினால், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து, அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி எச்சரிக்கையாக ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் கேட்டுக் கொண்டாா்.
மேலும் அவா் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டின்போது திரளாக மக்கள் கூடுவதால், கரோனா தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. கரோனா இரண்டாம் கட்ட அலை, குளிா்காலம் உள்ளிட்டவை இருப்பதால், ஆங்கில புத்தாண்டை கொண்டாடாமல் இருப்பது நல்லது. இதற்கு எதிா்ப்பு கிளம்பினால் எளிமையாகக் கொண்டாட அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதைத் தடை செய்யும் எண்ணம் மாநகராட்சிக்கு இல்லை. அன்று இரவு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறுவதிலும் உண்மை இல்லை. பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவது பற்றிய முடிவை அரசு எடுக்கும். அரசு எடுக்கும் முடிவைத் தொடா்ந்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...