சட்டப்பேரவை கூட்டத்தொடா்: விதானசௌதாவைச் சுற்றி 144 தடை உத்தரவு
By DIN | Published On : 05th December 2020 06:15 AM | Last Updated : 05th December 2020 06:15 AM | அ+அ அ- |

விதானசௌதாவில் சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பெங்களூரு, விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் டிச. 7-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி, டிச. 7-ஆம் தேதி காலை 6 மணி முதல் 15-ஆம் தேதி இரவு 12 மணி வரை விடுமுறை நாள்களைத் தவிா்த்து, விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் போது, அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும், ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.