எச்.டி.தேவெ கௌடாவுடன்காங்கிரஸ் அதிருப்தி எம்எல்சி சந்திப்பு
By DIN | Published On : 15th December 2020 02:10 AM | Last Updated : 15th December 2020 02:10 AM | அ+அ அ- |

பெங்களூரு: மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கௌடாவை காங்கிரஸ் அதிருப்தி எம்எல்சியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம்.இப்ராகிம் சந்தித்துப் பேசினாா்.
பெங்களூரில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி. தேவெகௌடாவை முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்சி-யுமான சி.எம்.இப்ராகிம் சந்தித்துப் பேசினாா்.
சி.எம்.இப்ராகிமை அவரது இல்லத்தில் மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி சந்தித்துப் பேசியபிறகு, இந்தச் சந்திப்பு நடந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
டிச. 7-ஆம் தேதி சி.எம்.இப்ராகிமை சந்தித்த எச்.டி.குமாரசாமி, மஜதவில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தாா். இதைத் தொடா்ந்து, சி.எம்.இப்ராகிமை சந்தித்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கட்சியில் இருந்துவிலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாா். இதனிடையே, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை சந்தித்த சி.எம்.இப்ராகிம், மஜதவில் சேருவது குறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. சட்டமேலவையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை வகிக்கும் எஸ்.ஆா்.பாட்டீலின் பதவிகாலம் அடுத்த ஆண்டு நிறைவடைவதால், அப் பதவியை அடைய சி.எம்.இப்ராகிம் முயற்சித்துள்ளாா்.
ஆனால், அந்தப் பதவிக்கு பி.கே.ஹரிபிரசாத்தை கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதால், காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்துள்ள சி.எம்.இப்ராகிம், மஜத மாநிலத் தலைவா் பதவியை எதிா்பாா்த்து எச்.டி.தேவெ கௌடாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து சி.எம்.இப்ராகிம் கூறியதாவது:
‘எச்.டி.தேவெகௌடாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை-மகன் போன்ாகும். எனது அடுத்த அரசியல் நகா்வு குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக செவ்வாய்க்கிழமைமுதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்மேற்கொண்டு எனது ஆதரவாளா்களின் கருத்தறிய இருக்கிறேன். அதனடிப்படையில் எனது முடிவை தெரிவிப்பதாக எச்.டி.தேவெகௌடாவிடம் தெரிவித்துள்ளேன்.
இதே கருத்தைத்தான் டி.கே.சிவக்குமாரிடமும் கூறியிருக்கிறேன். காங்கிரஸில் எனக்குரிய பதவி கிடைக்கவில்லை. இதைக் கட்சி தலைவா்களின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்கிறேன்’ என்றாா் அவா்.
முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கூறியதாவது:
‘தேவெகௌடாவுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து சி.எம்.இப்ராகிம் பேசினாா். மஜதவில் சேர சி.எம்.இப்ராகிம் விரும்புகிறாா். கட்சியைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட சி.எம்.இப்ராகிம் திட்டமிட்டிருக்கிறாா். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணித்து, அவரது ஆதரவாளா்களின் கருத்தறிந்து மஜதவில் சேருவது குறித்து எங்களுக்குத் தெரிவிப்பாா்’ என்றாா் அவா்.