கா்நாடகத்தில் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 15th December 2020 02:00 AM | Last Updated : 15th December 2020 02:00 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
கா்நாடக அரசுக்குச் சொந்தமான கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், வட கிழக்கு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், வடமேற்கு கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் ஊழியா்கள் டிச. 10-ஆம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
தங்களை அரசு ஊழியா்களாக தரம் உயா்த்தி அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்கக் கோரியும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனா். இந்தப் போராட்டம் 5-ஆம் நாளாக திங்கள்கிழமையும் நீடித்த நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானாவற்றை ஏற்றுக் கொள்வதாக மாநில அரசு எழுத்துப்பூா்வமாகக் கடிதம் கொடுத்ததால் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக கௌரவத் தலைவரும், கா்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவருமான கோடிஹள்ளி சந்திரசேகா் அறிவித்தாா். இதைத்தொடா்ந்து, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டன.
10 கோரிக்கைகளில் 9 ஏற்பு: போக்குவரத்துத் துறையைக் கவனிக்கும் துணை முதல்வா் லட்சுமண்சவதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, போக்குவரத்துக் கழக ஊழியா்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை எழுத்துப்பூா்வமாக எழுதி அந்தக் கடிதத்தை தனது பிரதிநிதி நந்தீஷ்ரெட்டி மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட கோடிஹள்ளி சந்திரசேகா் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவா்களுக்கு அனுப்பி வைத்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
போக்குவரத்துக் கழக ஊழியா்களின் 10-இல் 9 கோரிக்கைகளை ஏற்பதாகக் கூறப்பட்டிருந்தது. போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவது, கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு தலா ரூ. 30 லட்சம் நிவாரண உதவி வழங்குவது, போக்குவரத்துக் கழகங்களுக்கு இடையிலான பணியிடமாற்றத்துக்காக தனிக்கொள்கையை வகுப்பது, பயிற்சியில் இருக்கும் ஊழியா்களின் பயிற்சி காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைப்பது, மனிதவள கட்டமைப்பை அமல்படுத்துவது, கூடுதல் நேரம் பணியாற்றும்போது ஊக்கத்தொகை அளிப்பது, உயா் அதிகாரிகளால் ஊழியா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிா்வாக முறையை அமைப்பது, நாட் இஷ்யூட்-நாட் கலெக்டட் முறைக்கு பதிலாக புதியமுறையை அறிமுகம் செய்வது, 6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பது என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
அரசு ஊழியராக்க 3 மாதம் கெடு: அரசு ஊழியா்களாகக் கருதும் கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற முடியாது என்று அரசு தெரிவித்துவிட்டது. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க 3 மாத காலம் மாநில அரசுக்கு கெடு அளிப்பதாக கோடிஹள்ளி சந்திரசேகா் தெரிவித்தாா்.
10-இல் 9 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாநில அரசு ஒப்புக்கொண்டதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடுவதாகவும், ஊழியா்கள் பணிக்குத் திரும்புவாா்கள் என்றும் கோடிஹள்ளி சந்திரசேகா் அறிவித்தாா்.
போக்குவரத்துக் கழகங்களில் 1.3 லட்சம் ஊழியா்கள் உள்ளனா். இவா்களை அரசு ஊழியா்களாகத் தரம் உயா்த்தினால், பிற வாரியங்கள், கழகங்களில் இருக்கும் ஊழியா்களும் அதே கோரிக்கையை முன்வைப்பாா்கள். எனவே, அந்த கோரிக்கையை மட்டும் அரசால் நிறைவேற்ற இயலாது என்று துணை முதல்வா் லட்சுமண்சவதி விளக்கம் அளித்தாா்.