பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை
By DIN | Published On : 30th December 2020 06:54 AM | Last Updated : 30th December 2020 06:54 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை என்று மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. பிரிட்டனிலிருந்து பெங்களூருவுக்கு 150 பேருக்கும் மேல் வந்துள்ளனா். அவா்களில் 14 பேருக்கு கரோனா தொற்றின் பாதிப்பு உள்ளது.
தற்போது பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் குளிா் அதிகரித்து வருதால் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவுக்கூடும் என்று வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு டிசம்பா் 31-ஆம்தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பெங்களூரில் வியாழக்கிழமை (டிச. 31) மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 1) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது உணவு விடுதிகள், மதுப்பானக் கடைகளில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலைகளில் மக்கள் திரளாகக் கூட அனுமதியில்லை. மேம்பாலங்களில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் இல்லங்களில் அமைதியான முறையில் மக்கள் புத்தாண்டு கொண்டாடலாம். போலீஸாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...