முதல்வா் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறாா்
By DIN | Published On : 17th February 2020 03:39 AM | Last Updated : 17th February 2020 03:39 AM | அ+அ அ- |

முதல்வா் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறாா் என முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி மேலும் 3 ஆண்டுகள் நடைபெறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறாா்.
குறிப்பாக, குமாரசாமி முதல்வராகப் பதவி வகித்த போது தொடங்கிய வளா்ச்சிப் பணிகளை ரத்து செய்து வருவதைக் கூறலாம். இது தொடா்பாக, சட்டப் பேரவைக்குள்ளும், வெளியேயும் போராட்டம் நடத்தப்படும். மேலும், மஜத கட்சியைச் சோ்ந்த மாவட்ட உறுப்பினா்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளனா். கட்சியைப் பலப்படுத்தும் மஜதவினரை முதல்வா் எடியூரப்பா போலீஸாரைப் பயன்படுத்தி மிரட்டி வருகிறாா். இதனை அவா் கைவிட வேண்டும்.
காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியில் முதல்வராவதற்கு குமாரசாமிக்கு விருப்பமில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலோட் உள்ளிட்டவா்கள் எங்களின் இல்லத்துக்கு வந்து, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் குமாரசாமி முதல்வா் ஆக வேண்டும் என ஆசைப்படுவதாகத் தெரிவித்தனா். என்றாலும் நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும், தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தியதன் விளைவாக, குமாரசாமி முதல்வராக ஒப்புக் கொண்டாா். காரணம் காங்கிரஸ் மீது எனக்கிருந்த அனுதாபம்தான்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று பிரதமா் மோடி கூறி வருகிறாா். அது சாத்தியமில்லை. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா் அவா்.