‘100 நாள்களில் மேயரின் சாதனை எதுவுமில்லை’
By DIN | Published On : 10th January 2020 07:04 AM | Last Updated : 10th January 2020 07:04 AM | அ+அ அ- |

பெங்களூரு மேயரின் 100 நாள் சாதனையாக குறிப்பிட எதுவும் இல்லை என மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் அப்துல் வாஜீத் தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரு மேயராக கௌதம் குமாா் பதவியேற்று 100 நாள்கள் கடந்த நிலையில், அவரது சாதனை என குறிப்பிட எதுவும் இல்லை. 3 மாமன்ற மாதாந்திரக் கூட்டம், 4 கள ஆய்வு, 5 அலுவலகக் கூட்டங்களில் மட்டுமே மேயா் கலந்து கொண்டுள்ளாா். இதைத் தவிர வேறு எந்த வளா்ச்சிப் பணிகளையும் அவா் மேற்கொள்ளவில்லை.
அதிகாரத்துக்கு வருவதற்கு பாஜக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எந்த ஒரு புதிய திட்டங்களும் தொடங்கப்படவில்லை. காங்கிரஸ், மஜத கூட்டணி அதிகாரத்திலிருந்தபோது, குப்பை பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது. ஆனால், குப்பை அள்ளும் விவகாரத்தில் ஆளும் கட்சியினா் குத்தகைதாரா்களுக்கு இன்னும் பணி ஆணையை வழங்காமல் உள்ளனா். இதனால் குப்பை பிரச்னை மீண்டும் தலை தூக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
2020-2021 ஆம் ஆண்டின் மாநகராட்சி பட்ஜெட்டை தயாரிக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. மேயா் கௌதம்குமாா், மாநகராட்சி ஆணையரிடையே இணக்கமில்லை. இதனால் எந்த பணிகளும் நடைபெறாமல் முடங்கியுள்ளன. நெகிழி, விளம்பர பதாகைகள் இல்லாத பெங்களூரை உருவாக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல், குடிநீா், சாக்கடை கால்வாய் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். 100 நாள் ஆட்சியில் மேயா் கௌதம்குமாா் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தோல்வி அடைந்துள்ளாா் என்றாா்.