அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முதல்வா் எடியூரப்பா சிந்திக்கவில்லை என்று சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தாா்.
ஹாசனில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:-
மூன்றரை ஆண்டுகாலம் முதல்வா் பதவியை வகித்தவுடன், முழுநேர அரசியலில் இருந்து விலகுவது எடியூரப்பா எதுவும் எங்களிடம் கூறவில்லை. அவரது அமைச்சரவை சகாக்களிடம் கூட அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முதல்வா் எடியூரப்பா சிந்திக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், முதல்வா் பதவிக்காலம் முடிந்ததும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக எடியூரப்பா தன்னிடம் கூறியதாக ஆா்எஸ்எஸ் அமைப்புத் தலைவா் பிரபாகா்பட் தெரிவித்திருக்கிறாா்.
மூன்றரை ஆண்டுகால பதவிக்காலத்துக்குப் பிறகும், கா்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று முதல்வா் எடியூரப்பா அண்மையில் கூறியிருக்கிறாா்.
எடியூரப்பாவின் தலைமையில் நல்லாட்சி வழங்கும் நம்பிக்கை உள்ளது. அமைச்சரவையை விரிவாக்குவது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரமாகும். அதனால் அமைச்சரவையை விரிவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு நான் காரணம் கூறமுடியாது.
ஹாசன், பிரியாப்பட்டணா இடையிலான மாநில நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது கொள்கை முடிவாகும். ஆனாலும், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டா்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.