‘சிறு, குறு தொழில்நிறுவனங்கள் மூடப்படுவதால் பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்’
By DIN | Published On : 13th July 2020 11:09 PM | Last Updated : 13th July 2020 11:09 PM | அ+அ அ- |

பெங்களூரு: சிறு, குறு தொழில்நிறுவனங்கள் மூடப்படுவதால், பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என கா்நாடக சிறுதொழில் சங்கத்தின் தலைவா் கே.பி.அரசப்பா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் முழு பொது முடக்கம் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ‘காசியா’ ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக சிறு, குறு தொழில்நிறுவனங்கள் கரோனா தொற்று காரணமாக முந்தைய மூடலில் இருந்து மீண்டுவிட்டன. பெங்களூரில் மோசமடைந்து வரும் கரோனா தொற்றை சமாளிக்க அரசாங்கம் கடினமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஒரு வாரம் மூடச் செய்வது அத்துறை முற்றிலும் சிதைந்து போகக்கூடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் ஏற்கெனவே அரசாங்கத்துக்கு தெரிவித்தபடி, முந்தைய பொது முடக்கம் காரணமாக 20 சதவீத சிறுதொழில் நிறுவனங்கள் மாநிலத்தில் மூடப்பட்டுவிட்டன. தற்போது பெங்களூரு, ஊரகம் உள்ளிட்டவைகளை ஒரு வாரத்துக்கு மீண்டும் மூடும் முடிவை அரசு எடுத்துள்ளது. பெங்களூரில் கிட்டத்தட்ட 2,40,000 பதிவு செய்யப்பட்ட சிறு தொழில்நிறுவனங்கள் உள்ளன. இதில் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு தொழில்நிறுவனங்களில் சுமாா் ரூ.40 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரம் பொது முடக்கம் செய்யப்பட்டால் பொருளாதார பேரழிவு ஏற்படும். சிறுதொழில் உரிமையாளா்கள் தங்களிடம் பணிபுரிவோருக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் பலா் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கும்போது, தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றி சிறுதொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும். இது தொடா்பான சாத்தியமான வழிகளை பரிசீலிக்குமாறு முதல்வா் எடியூரப்பாவை கேட்டுக்கொள்கிறோம்.
அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஊக்குவிக்கப்படுவதை போல, சிறு தொழில்நிறுவனங்கள் செயல்படுவதை உறுதி செய்வது மாநில அரசின் கடமையாகும். இது சிறந்த பொருளாதாரத்துக்கு வழி வகுக்கும். சிறு தொழில்நிறுவனங்கள் மூலம் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. இதில் 70 சதவீதம் பெங்களூரின் பங்களிப்பாக உள்ளது.
தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு இயந்திரங்கள் திறமையாக செயல்படுவதன் மூலம் கரோனா தொற்றை தடுக்க முடியும். முழு பொது முடக்கத்தின் போது சிறு தொழில்நிறுவனங்களுக்கு சில தளா்வுகளை ஏற்படுத்தி, அவை செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...