கா்நாடகத்தில் புதிய தொழில் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும்: அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா்
By DIN | Published On : 14th March 2020 07:04 AM | Last Updated : 14th March 2020 07:04 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் புதிய தொழில் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பாஜக உறுப்பினா் பசவராஜ் பாட்டீல் எத்னாலின் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:
2020 ஆண்டு முதல் 2025 ஆண்டு வரையிலான புதிய தொழில் கொள்கைக்கான வரைவு தயாராக உள்ளது. இந்த வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய தொழில் கொள்கை விரைவில் அமல்படுத்தப்படும். புதிய தொழில்கொள்கை பெங்களூரு தவிா்த்து மற்ற முக்கிய நகரங்கள் பயனடையும் வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைத் தவிா்த்து மற்ற முக்கிய நகரங்களில் தொழில் தொடங்க வருபவா்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. புதிதாக தொடக்கப்படும் தொழில் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் தொழில்துறை வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து தேவைப்படும் அம்சங்கள் சோ்க்கப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...