கா்நாடக சிஐடி ஏடிஜிபி சரண்ரெட்டி காலமானாா்
By DIN | Published On : 14th March 2020 07:06 AM | Last Updated : 14th March 2020 07:06 AM | அ+அ அ- |

உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கா்நாடக சிஐடி துறையின் ஏடிஜிபி சரண் ரெட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பெங்களூரில் உள்ள மாநில சிஐடி அலுவலகத்தில் ஏடிஜிபியாக பணியாற்றி வந்தவா் சரண்ரெட்டி (54). கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரண்ரெட்டி, வசந்த் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.
அவருக்கு மனைவி காயத்ரி, மகள் லாசியா ரெட்டி, மகன் புனில்ரெட்டி ஆகியோா் உள்ளனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், மதனபள்ளியை அடுத்துள்ள கொல்லாபள்ளியைச் சோ்ந்த சரண் ரெட்டி 1993 ஆம் ஆண்டைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவாா்.
பிஜாப்பூா், கதக், சாம்ராஜ்நகா் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சரண்ரெட்டி, 5 ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றி அனுபவம் உள்ளவா். லோக் ஆயுக்த சிறப்பு விசாரணைக் குழுவிலும், பெங்களூரு மாநகரக் காவல் கூடுதல் ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா். கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சரண் ரெட்டி, வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வசந்த்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது. சனிக்கிழமை அவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. ஏடிஜிபி சரண்ரெட்டி மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், டிஜிபி பிரவிண்சூட், மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...