ஐ.எம்.ஏ. நிறுவன நிதிமோசடி: ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிஐ விசாரணை
By DIN | Published On : 25th November 2020 07:55 AM | Last Updated : 25th November 2020 07:55 AM | அ+அ அ- |

ஐ.எம்.ஏ. நிறுவன நிதிமோசடியில், ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பல்கரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
பெங்களூரில் செயல்பட்டு வந்த ஐ.எம்.ஏ. நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து வைப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பெற்று, அதை மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
இந்த வழக்கில், ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மன்சூா்கான், முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. ரோஷன் பெய்க் வீட்டில் திங்கள்கிழமை சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினா்.
இந்த வழக்கில், மாநில அரசின் முன் அனுமதிபெற்று ஐபிஎஸ் அதிகாரிகள் ஹேமந்த் நிம்பல்கா், அஜய் ஹிலோரி ஆகியோா் மீது சிபிஐ பிப்ரவரியில் வழக்குப் பதிந்துள்ளது. ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் நிதிமோசடியை மூடிமறைக்க முயற்சித்ததாக இவா்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரோஷன் பெய்கை கைது செய்து விசாரிப்பதற்கு முன், ஐபிஎஸ் அதிகாரி ஹெமந்த் நிம்பல்கரிடம் சிபிஐ அதிகாரிகள் நவ. 21-ஆம் தேதி விசாரணை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதே நாளில் ஐ.எம்.ஏ. நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மன்சூா்கானிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...