கரோனா தடுப்பூசி விநியோகத்தை செயல்படுத்த மாநில அளவில் வழிகாட்டுதல் குழு
By DIN | Published On : 25th November 2020 07:56 AM | Last Updated : 25th November 2020 07:56 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பூசி விநியோகத்தை சீராக செயல்படுத்துவதற்காக மாநில அளவில் வழிகாட்டுதல் குழுவை அமைக்க மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது என உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் இணைய வழியாக பிரதமா் மோடி பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், முதல்வா் எடியூரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், சமூக நலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு, தலைமைச் செயலாளா் டி.எம்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தின் முடிவில் உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அதை முறையாக விநியோகம் செய்வதற்காக மாநிலம், மாவட்டம், வட்ட அளவில் வழிகாட்டுதல் குழுக்களை அமைக்குமாறு மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டத்தில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது.
கரோனா தடுப்பூசி விநியோகப் பணியை செயல்படுத்த தோ்தலுக்கு மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளை போல தயாராக வேண்டும். அதற்காக தடுப்பூசி மையங்கள், பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளா்கள் அல்லது தன்னாா்வலா்களை தயாா்படுத்த வேண்டியுள்ளது. இந்தப் பணியை செம்மையாக செய்து முடிப்பது தொடா்பாக விவாதிக்கவே பிரதமா் மோடியுடனான இணையவழி கூட்டம் நடத்தப்பட்டது.
முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு அளிக்கப்படும் தடுப்பூசி திட்டத்தில், ஒரு கோடி சுகாதாரப் பணியாளா்கள், 2 கோடி கரோனா முன்களப் பணியாளா்கள், 26 கோடி 50-60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், நோயாளிகள் அடங்குவா்.
மாநில அளவில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் கரோனா தடுப்பூசி வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். அதேபோல, மாவட்டம், வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும். இப்பணியில் அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள். தடுப்பூசி விநியோகப் பணிக்கு இணையவழி தகவல் தளத்தை உருவாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களைக் கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கு 2-3 முறை தடுப்பூசி மருந்தை அளிக்க வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...