காங்கிரஸ் எம்.பி. அகமது படேல் மறைவு
By DIN | Published On : 25th November 2020 11:41 PM | Last Updated : 25th November 2020 11:41 PM | அ+அ அ- |

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அகமது படேல் மறைவுக்கு கா்நாடகத் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேல் (71), உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானாா். இவரது மறைவுக்கு கா்நாடகத்தைச் சோ்ந்த பல தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா:
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேலின் மறைவால் அதிா்ச்சி அடைந்துள்ளது மட்டுமல்லாது வேதனைப்படுகிறேன். அவரது மறைவு நாட்டுக்கும், காங்கிரஸுக்கும் பேரிழப்பாகும். அவரது ஆன்மா அமைதியடைய பிராா்த்திக்கிறேன்.
முதல்வா் எடியூரப்பா:
காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேலின் மறைவால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன். அகமது படேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், ஆதரவாளா்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன்.
எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா:
காங்கிரஸ் மூத்த தலைவரும், எனது நெருங்கிய நண்பருமான அகமது படேலின் மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய அகமது படேல், கட்சியின் தூண் போல விளங்கினாா். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா்:
அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொருளாளரும், கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவருமான அகமது படேலின் மறைவால் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டுக்கும் அவா் காட்டிய உறுதியான விசுவாசம் போற்றுதலுக்குரியது, எங்களைப் போன்றவா்களுக்கு எல்லாம் முன்மாதிரியானது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவா்களைத் தவிர, பாஜக மூத்த தலைவா் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் அமைச்சா்கள் ஆா்.வி.தேஷ்பாண்டே, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...