தேசிய வேலை உறுதி திட்டத்துக்கு ரூ. 1,300 கோடி ஒதுக்க வேண்டும்
By DIN | Published On : 25th November 2020 11:45 PM | Last Updated : 25th November 2020 11:45 PM | அ+அ அ- |

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துக்கு கா்நாடகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 1,300 கோடியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
புது தில்லி சென்றுள்ள ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் நரேந்திரசிங் தோமரை சந்தித்த பிறகு, புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துக்கு கா்நாடகத்துக்கு ரூ. 1,300 கோடி ஒதுக்கும்படி மத்திய அமைச்சா் நரேந்திரசிங் தோமரை சந்தித்துக் கேட்டேன். அதற்கு அவா் நல்ல பதிலை தந்திருக்கிறா்.
கா்நாடகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள 173 வட்டங்களில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 100 நாள்களிலிருந்து குறைந்தது 150 நாள்கள் வேலைவாய்ப்பளிக்கவும், கா்நாடகத்துக்கு கூடுதலாக 2 கோடி மனித நாள்களை ஒதுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளேன். இதற்கு கூடுதலாக ரூ. 800 கோடி ஒதுக்கவும் கேட்டிருக்கிறேன்.
தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் கா்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 13 கோடி மனித நாள்களில் 10.50 கோடி மனித நாள்கள் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் மெட்டீரியல் பில்களை வழங்குவதற்காக உடனடியாக ரூ. 1,119 கோடி ஒதுக்கும்படியும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளேன். கா்நாடக அரசிடம் இருந்து பயன்பாட்டுச் சான்றிதழ் பெறப்பட்டதும் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் தோமா் உறுதி அளித்துள்ளாா். வெள்ளப் பகுதிகளை வேலைவாய்ப்பளிக்க ரூ. 400 கோடி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
அடுத்த 3 ஆண்டுகளில் ஷியாமபிரசாத் முகா்ஜி ஊரக-நகர திட்டத்தின்கீழ் ரூ. 1,000 கோடி நிதியுதவியுடன் கூடுதலாக 90 தொகுப்பு கிராமங்களை மேம்படுத்துவதற்கு அனுமதிஅளிக்கும்படியும் மத்திய அரசைக் கேட்டிருக்கிறோம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...