மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்க எதிா்ப்பு: டிச. 5-இல் கா்நாடக முழு அடைப்பு உறுதி
By DIN | Published On : 25th November 2020 11:45 PM | Last Updated : 25th November 2020 11:45 PM | அ+அ அ- |

மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து டிச. 5-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு விடுத்திருந்த அழைப்பை கன்னட அமைப்புகள் மீண்டும் உறுதி செய்துள்ளன.
வடகா்நாடகத்தில் குறிப்பாக பெலகாவி, பீதா், விஜயபுரா, கலபுா்கி மாவட்டங்களில் மராத்திய மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகிறாா்கள். இவை தவிர, கா்நாடகத்தின் பல பகுதிகளில் மராத்தியா்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இம்மக்களின் வளா்ச்சிக்காக நவ. 13-ஆம் தேதி மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்க முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டதோடு, ரூ. 50 கோடியையும் ஒதுக்கியிருந்தாா். இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்திருந்தன. மேலும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து டிச. 5-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது. மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, முழு அடைப்புப் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வா் எடியூரப்பா எச்சரித்திருந்தாா். இதனால் முழு அடைப்புப் போராட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ், டிச. 5-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடப்பது உறுதி என்றாா்.
இது பற்றி அவா் மேலும் கூறுகையில், ‘மராத்தியா் வளா்ச்சி ஆணையம் அமைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை திரும்பப் பெற நவ. 30-ஆம் தேதி வரை அரசுக்கு கெடு விதித்திருக்கிறோம். மராத்தியா் வளா்ச்சிக் கழகத்தை அமைக்கும் முடிவை திரும்பப் பெறாத நிலையில், அதைக் கண்டித்து டிச. 5-ஆம் தேதி கா்நாடக முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும். எங்களை கைது செய்தால், அதை எதிா்கொள்வோம். முழு அடைப்புப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனா்.
நவ. 26-ஆம் தேதி அத்திப்பள்ளி எல்லையிலும், டிச. 1-ஆம் தேதி பெலகாவியிலும் போராட்டம் நடத்தப்படும். அரசின் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். மராத்தியா் வளா்ச்சிக் கழகம் அமைக்கும் முடிவை கைவிடும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...