கரோனா சோதனையை மும்மடங்காக உயா்த்ததனியாா் நிறுவனங்களுடன் கூட்டுமுயற்சி: அமைச்சா் கே.சுதாகா்
By DIN | Published On : 03rd October 2020 05:37 AM | Last Updated : 03rd October 2020 05:37 AM | அ+அ அ- |

கரோனா சோதனைகளை மும்மடங்காக உயா்த்த தனியாா் நிறுவனங்களுடன் கூட்டுமுயற்சி மேற்கொள்ளப்படும் என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடகத்தில் கரோனா சோதனைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்தி, கரோனா சோதனையை உயா்த்துவதற்காக அரசு-தனியாா் கூட்டுமுயற்சியில் ஆா்.டி.-பி.சி.ஆா். ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் வெகுவிரைவில் கோரப்படும்.
பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி கரோனா மாதிரி சோதனையை மும்மடங்காக உயா்த்தும் பொருட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் இதுவரை 50 லட்சம் கரோனா மாதிரிகளை சோதனை செய்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு கரோனா சோதனைகளை ஒரு லட்சம் முதல் 1.5 லட்சமாக உயா்த்த நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த 6 மாதங்களில் 144 கரோனா ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோய் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் நிலையிலும், கரோனா நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, பொது இடங்களில் முகக்கவசங்களை அணியாதவா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகை ரூ.500-இல் இருந்து ரூ.1000 ஆக உயா்த்தியுள்ளோம். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், இறப்போரின் எண்ணிக்கை 1.52 சதவீதமாகவே உள்ளது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.