விவசாயிகளின் கோபம் வெடிப்பது உறுதி: மல்லிகாா்ஜுனகாா்கே

 நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விவசாயிகளின் கோபம் வெடிப்பது உறுதி என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விவசாயிகளின் கோபம் வெடிப்பது உறுதி என்று காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

கா்நாடக காங்கிரஸ் கட்சி சாா்பில் பெங்களூரு, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த அண்ணல் காந்தியடிகளின் 151-ஆவது பிறந்தநாள், முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் 116-ஆவது பிறந்த நாள்விழாவில் அவா்களது உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தியபிறகு, அவா் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளன. ‘ராணுவ வீரன் வாழ்க, உழவன் வாழ்க’ என்று முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி முழங்கியிருந்தாா். ஆனால், இன்றைக்கு விவசாயிகளுக்கும் சரி, ராணுவ வீரா்களுக்கும் உரிய மரியாதை இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் உள்ள ஆட்சியாளா்களே காரணம். விவசாயிகளின் கோபம் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டுள்ளது. அது எப்போது வெடிக்கும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால், விவசாயிகளின் கோபம் கண்டிப்பாக வெடிக்கும்.

பணமதிப்பிழப்பு செய்து பொருளாதாரத்தை சீா்குலைத்தனா். பொது முடக்கம் கொண்டுவந்து தொழிலாளா்களின் வாழ்க்கையை சீரழித்தனா். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அட்டூழியங்கள் அதிகமாகி விட்டன. ஜாதிகளுக்கு இடையே ஜாதிகளை மோதவிட்டு ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க பாஜக திட்டமிட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா், மகளிா், மத சிறுபான்மையினா், விவசாயிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட அனை த்துத் தரப்பினா் மீதும் வன்முறை ஏவப்படுகின்றன.

காந்தியடிகளின் போராட்டங்களின் வழியாக நமதுநாட்டுக்கு விடுதலை கிடைத்தது.1917-ஆம் ஆண்டு நடந்த சம்பரண்யா போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு அளித்திருந்தனா். கிலாஃபத் கிளா்ச்சி உலகத்திற்கு முன்மாதிரியானது. அதேபோல, வெள்ளையனே வெளியேறு போராட்டம் நமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தது. நமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும், சமூக சுதந்திரம் கிடைக்கவில்லை. அதனால் பெண்கள் மீதான வன்முறை, சட்டவிதிமீறல்கள் அதிகரித் துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டசமூகத்தைச் சோ்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்துள்ளாா். அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மீதான வன்முறை, பாலியல் பலாத்காரம் அதிகரித்துள்ளது. பாலியல் பலாத்காரத்தால் இறந்துபோன இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் அம்மாநில காவல்துறை மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது.

இவ்வளவு நடந்தபிறகும், பிரதமா் மோடி எந்த கருத்தும்கூறவில்லை. பாலியல் பலாத்காரம் விவகாரம் பெரிதானபிறகு தனது சுட்டுரைப் ப க்கத்தில் பிரதமா் மோடி கருத்து தெரிவித்துள்ளாா். நல்லவா்களின் கையில் ஆட்சி இல்லை. வளா்ச்சி என்பதையே ஆட்சியாளா்கள் மறந்துவிட்டனா். சமுதாயத்தை பிளவுப் படுத்துவதிலேயே காலத்தை கழித்துக்கொண்டுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா,முன்னாள் அமைச்சா் ராமலிங்கரெட்டி, கட்சியின் மாநில செயல் தலைவா் சலீம் அகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com