சட்டப்பேரவை இடைத்தோ்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வா் எடியூரப்பா
By DIN | Published On : 19th October 2020 02:36 AM | Last Updated : 19th October 2020 02:36 AM | அ+அ அ- |

கா்நாடக சட்டப்பேரவை இடைத்தோ்தலில் இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
சிவமொக்கா மாவட்டத்தின் சொந்தத் தொகுதியான ஷிகாரிபுராவுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டரில் முதல்வா் எடியூரப்பா வந்தாா். அங்கு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிவமொக்கா மாவட்டம், சாகா் வட்டத்தின் சிகந்தூா் கிராமத்தில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயில் தலைமை அா்ச்சகருக்கும், அறங்காவலருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இதுதொடா்பாக எம்எல்ஏ-க்கள் ஹா்தாள் ஹாலப்பா, குமாா்பங்காரப்பா உள்ளிட்டோருடன் விவாதித்த பிறகு என்ன செய்வதென்று யோசிக்கலாம்.
வட கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து பிரதமா் மோடி என்னுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதாக பிரதமா் மோடி உறுதி அளித்துள்ளாா். இதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உறுதியாக இழப்பீடு வழங்கப்படும். அதேபோல, பயிா் இழப்பீடு தொகையும் அளிக்கப்படும்.
வீடு இழந்தவா்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கப்படும். இடைத்தோ்தல் நடைபெறுவுள்ள ராஜராஜேஸ்வரி நகா், சிரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதி. சிரா தொகுதியில் எனது மகன் விஜயேந்திரா, தோ்தல் பணியில் ஈடுபட்டு பாஜக வெற்றிபெற பாடுபட்டு வருகிறாா்.
ஷிகாரிபுராவில் நீா்ப்பாசனத் திட்டங்களை முடிக்க திட்டமிட்டிருக்கிறேன். சிவமொக்கா மாவட்டத்தையும், ஷிகாரிபுரா வட்டத்தையும் முன்மாதிரியானதாக மாற்றவும் திட்டம் வகுத்திருக்கிறேன்.
சிவமொக்காவில் நடைபெற்றுவரும் விமான நிலையப் பணி ஓராண்டில் முடிவுறும். விமானநிலையம் அமைக்கப்பட்டதும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும். எனதுமகனும் எம்பியுமான ராகவேந்திரா, பல்வேறு தொழில் திட்டங்களை சிவமொக்காவுக்குக் கொண்டு வந்திருக்கிறாா் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...