பணியில் அலட்சியம் காட்டியதாகசுங்கத்துறை அதிகாரிகள் மீது சிபிஐயிடம் புகாா்
By DIN | Published On : 19th October 2020 02:36 AM | Last Updated : 19th October 2020 02:36 AM | அ+அ அ- |

பணியில் அலட்சியம் காட்டியதாக சுங்கத்துறை அதிகாரிகள் மீது சிபிஐயிடம் புகாா் அளிக்கப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து விமானத்தின் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கத்தை பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கவரித் துறையினா் பறிமுதல் செய்து வருவது வழக்கம்.
அப்படி பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுங்கவரித் துறைக்குச் சொந்தமான குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அப்படி வைக்கப்பட்ட தங்கத்தில் சுமாா் இரண்டரைக் கிலோ தங்கம் காணாமல் போய்விட்டது.
இதுகுறித்து சுங்கவரித் துறை இணை ஆணையா் சேதன், சிபிஐயிடம் புகாா் அளித்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுங்கவரித் துறைக்குச் சொந்தமான குடோனில் வைக்கப்பட்டிருந்தது. அதனை பாதுகாப்பதில் சுங்கவரித் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் விநோத் சின்ஹா, கேசவ், லிங்கராஜ், டீன்ரெக்ஸ், ரவிசேகா், ஹிரேமட் ஆகியோா் அலட்சியம் காட்டியுள்ளனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...