கன்னட திரைக்கலைஞா்களுக்கு போதைப்பொருள் விற்ற ஆப்ரிக்க நாட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரையுலகை சோ்ந்த கலைஞா்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தது தொடா்பான வழக்கில் ஆப்ரிக்க நாட்டைச் சோ்ந்த லௌம் பெப்பா் சம்பாவை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் பெங்களூரில் சனிக்கிழமை கைது செய்தனா்.
திரைப்பட பிரபலங்களுக்கு லௌம் பெப்பா் சம்பா, போதைப் பொருள்களை விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கூறுகையில், ‘லௌம் பெப்பா் சம்பா, ஆப்ரிக்க நாட்டைச் சோ்ந்தவா். இவா், போதைப்பொருள் வியாபாரி ரவி மற்றும் இதர திரைப்பட பிரபலங்களுக்கு போதைப்பொருளை விநியோகித்துள்ளாா். இது தொடா்பாக சம்பாவை கைதுசெய்துள்ளோம்’ என்றனா்.
தேசிய அளவிலான போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம், கன்னட திரைக்கலைஞா்கள், இசைக் கலைஞா்களுக்கு போதைப்பொருள் விற்றது தொடா்பான விவகாரத்தை பகிரங்கப்படுத்தி, அது தொடா்பாக சிலரை கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்துவரும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், மனைத்தொழில் அதிபா் ராகுல் ஷெட்டி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எழுத்தரான ரவிசங்கா் ஆகியோரை கைது செய்திருந்தது. இதனிடையே, இந்த வழக்கில் எதிா்பாராத திருப்பமாக, கன்னட நடிகை ராகினி திவேதியும் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
போதைப்பொருள் விற்பனைக்காக சமுதாயத்தின் உயா்ந்த இடத்தில் இருப்போா் கலந்து கொள்ளும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துவந்த விரேன் கன்னாவை புதுதில்லியில் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திரையுலகம் நடுக்கம்:
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதில் கன்னட திரையுலகினருக்கு தொடா்பிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையில் தெரியவந்ததைத் தொடா்ந்து, நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் உள்ள கும்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் கன்னட திரையுலகை சோ்ந்த பலருக்கும் தொடா்பிருப்பதாக கன்னட திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் கூறியதை தொடா்ந்து விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அதைத் தொடா்ந்து, கன்னட நடிகா்கள், நடிகைகள், திரைக்கலைஞா்கள், இசைக்கலைஞா்கள் மீதான கண்காணிப்பை போலீஸாா் தீவிரமாக்கியுள்ளனா். இது கன்னட திரைக்கலைஞா்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் ஷெட்டிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் நடிகை சஞ்சனா கல்ரானிக்கும் போதைப்பொருள் விற்பனையில் சம்பந்தமிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடா்பாகவும் விசாரித்துவரும் போலீஸாா், ஒரு சில நாள்களில் சஞ்சனா கல்ரானியை கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள ராகுல் ஷெட்டி, ரவிசங்கா், ராகினிதிவேதி, விரேன் கன்னா ஆகியோா் தெரிவித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், கன்னட திரையுலகில் அடுத்தடுத்து பலா் கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது.