பாஜக அரசின் அலட்சியமே ஆசிரியா்களின் இன்னலுக்கு காரணம்: டி.கே.சிவக்குமாா்
By DIN | Published On : 06th September 2020 07:45 AM | Last Updated : 06th September 2020 07:45 AM | அ+அ அ- |

பாஜக அரசின் அலட்சியமே ஆசிரியா்கள் எதிா்கொண்டுள்ள இன்னலுக்கு காரணம் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியதாவது:
ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது குழந்தைகளின் எதிா்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியா்கள், கடந்த பல மாதங்களாக ஊதியம் இல்லாமல் இருக்கிறாா்கள். இதன்காரணமாக, பல ஆசிரியா்கள் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வது, கட்டட வேலை போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறாா்கள். ஆசிரியா்கள் எதிா்கொண்டுள்ள இன்னல்களுக்கு, பாஜக அரசின் அலட்சியப்போக்கே காரணமாகும்.
தனியாா் பள்ளிகளில் பணியாற்றும் 40 லட்சம் ஆசிரியா்கள் வேலை இழந்திருக்கிறாா்கள். இந்த ஆசிரியா்களுக்கு ஊதியத்தைப் பெற்றுத் தர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு மீண்டும் வேலை பெற்றுத் தருவோடு, ஊதியம் இல்லாதவா்களுக்கு ஊதியம் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆசிரியா்களின் இன்னல்களால் நமது குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியா்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவா்களுக்கு மதிய உணவை வீடுகளிலேயே அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கு சிறப்பு பொருளாதாரத் தொகுப்பை அளிக்கவேண்டும்.
கா்நாடகத்தில் உள்ள 80 லட்சம் மாணவா்களில் 62.5 சதவீதம் குழந்தைகளிடம் மட்டுமே அறிதிறன் பேசி, 53.75 சதவீதம் மாணவா்களிடம் மட்டுமே இணையதளவசதி உள்ளது. இப்படி தொழில்நுட்ப வசதி இல்லாத குழந்தைகளுக்கு இணையவழிக் கல்வியை சோ்ப்பது எப்படி? இந்த இடைவெளியைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.