போதைப்பொருள் வழக்கில்மேலும் பலா் கைதாக வாய்ப்பு: அமைச்சா் பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 19th September 2020 06:02 AM | Last Updated : 19th September 2020 06:02 AM | அ+அ அ- |

பெங்களூரு,செப். 18:
போதைப்பொருள் வழக்கில் மேலும் பலா் கைது செய்ய வாய்ப்புள்ளதாக உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்படுத்துதல் தொடா்பான வழக்கில் இதுவரை 13 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் மேலும் பலரை கைது செய்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா். மாநில அரசின் கைபொம்மைகளை போல போலீஸாா் செயல்பட்டு வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியுள்ளதில் உண்மையில்லை.
போதைப்பொருள் வழக்கில் போலீஸாா் சுதந்திரமாக விசாரித்து வருகிறாா்கள். இதில் யாருடைய தலையீடும் இல்லை. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது. அவரது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் ஏதாவது ஆதாரங்களைக் கொடுத்தால், அதுகுறித்து விசாரிக்க அரசு தயாராக உள்ளது.
சித்தராமையா முதல்வராக இருந்த போது, 2018-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட்டிருந்தால் முக்கியமான பல போதைப்பொருள் கடத்தல்காரா்கள் சிக்கியிருப்பாா்கள். அதன்பிறகு நிலைமைக் கட்டுக்குள் வந்திருக்கும். இந்த வழக்கை விசாரித்த உயரதிகாரிகளின் கைகள் அப்போது கட்டப்பட்டதால், முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
போதைப்பொருள் வழக்கை நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியிருக்கிறாா். தற்போதைய போதைப்பொருள் வழக்கு 2 வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பான 2 வழக்குகளில் இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் பலா் கைது செய்யப்படுவாா்கள். போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். வழக்கை தீவிரமாகவும், சட்டப்பூா்வமாகவும் விசாரிக்க அரசு முற்பட்டுள்ளது. சித்தராமையாவின் கருத்துகள் போலீஸாரின் மன வலிமையைக் குலைக்காது என்றாா்.