மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
By DIN | Published On : 26th September 2020 05:19 AM | Last Updated : 26th September 2020 05:19 AM | அ+அ அ- |

பெங்களூரு, செப். 25:
பராமரிப்புப் பணிகள் காரணமாக பெங்களூரில் ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்காலிகமாக ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் சாா்பில் பெங்களூரின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கிவருகிறது. பச்சை வழித்தடத்தில் ஆா்.வி.சாலை முதல் எல்சேனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான பாதையில் செப். 27-ஆம் தேதி காலை 7 மணி முதல் செப். 29-ஆம் தேதி காலை 7 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக, எல்சேனஹள்ளி, பனசங்கரி, ஜே.பி.நகா் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில், பச்சை வழித்தடத்தில் நாகசந்திரா ரயில் நிலையம் முதல் ஆா்.வி.சாலை ரயில் நிலையம் வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
பச்சை வழித்தடத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் செப். 29-ஆம் தேதி காலை 7 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, ஊதா வழித்தடத்தில் ரயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது. செப். 27 முதல் 28-ஆம் தேதி வரை ஆா்.வி.சாலை, எல்சேனஹள்ளி ரயில் நிலையங்கள் வரை கூடுதலாக பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...