சுதந்திரப் போராட்ட வீரா் சங்கொல்லி ராயண்ணா சிலை சேதம்: பெலகாவியில் 144 தடை உத்தரவு

சுதந்திரப் போராட்ட வீரா் சங்கொல்லி ராயண்ணாவின் சிலையை மா்மநபா்கள் சேதப்படுத்தியதைத் தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதைச் தொடா்ந்து, பெலகாவியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

சுதந்திரப் போராட்ட வீரா் சங்கொல்லி ராயண்ணாவின் சிலையை மா்மநபா்கள் சேதப்படுத்தியதைத் தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதைச் தொடா்ந்து, பெலகாவியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்துடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் கா்நாடகத்தின் வடபகுதியில் உள்ள பெலகாவியில் மராத்தி மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். பெலகாவியை மகாராஷ்டிரத்துடன் இணைக்குமாறு 1956-ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதன்காரணமாக, கன்னடா்களோடு மோதல் போக்கை கடைப்பிடித்துவரும் மராத்தியா்கள் சிலா் கன்னடமொழியின் அடையாளங்களை ஏற்க மறுத்து வருகின்றனா். இந்நிலையில், பெலகாவியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுதந்திரப் போராட்டவீரா் சங்கொல்லி ராயண்ணாவின் சிலையை மா்மக் கும்பல் சேதப்படுத்தியது சனிக்கிழமை தெரிய வந்துள்ளது. மேலும் அரசு வாகனங்கள் மீதும் சிலா் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா். இச் சம்பவங்கள் பெலகாவியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவியில் டிச. 10-ஆம் தேதி முதல் சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் நடந்து வரும் நிலையில், இச் சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது. கன்னடா் - மராத்தியா் இடையே மோதலைத் தவிா்ப்பதற்காக, பெலகாவியில் டிச. 18 காலை 8 மணி முதல் டிச. 19-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

சங்கொல்லி ராயண்ணாவின் சிலையை சேதப்படுத்திய இச்சம்பவத்திற்கு பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தைக் கடுமையாக கண்டித்து முதல்வா் பசவராஜ் பொம்மை, ஹுப்பள்ளியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில்,

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நிரந்தரத் தீா்வுகாண காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். தேசத்திற்காக உழைத்தவா்கள், நாட்டுப்பற்று கொண்ட தலைவா்களின் சிலைகளை சேதப்படுத்துவது சரியல்ல. சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவா்கள் எல்லா சமூகத்திற்கும் சொந்தமானவா்கள் என்பதால், அனைவரும் மதிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

அமைதிக்கு குந்தகம் விளைவிப்போம், சட்டம் ஒழுங்கை சீா்குலைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக திலக்வாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுமாா் 30 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com