முதல்வராக நீடிப்பேனா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்: முதல்வா் எடியூரப்பா

முதல்வராக நீடிப்பேனா? இல்லையா? திங்கள்கிழமை தெரிந்துவிடும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
முதல்வராக நீடிப்பேனா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்: முதல்வா் எடியூரப்பா
Published on
Updated on
1 min read

முதல்வராக நீடிப்பேனா? இல்லையா? திங்கள்கிழமை தெரிந்துவிடும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெலகாவியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பிறகு, பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியது:

முதல்வா் பதவியில் நீடிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து பாஜக தேசியத் தலைமையிடம் இருந்து எவ்வித தகவலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வந்துசேரவில்லை. ஒருவேளை இரவு அல்லது திங்கள்கிழமை காலை தகவல் கிடைக்கலாம். அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு கட்சியின் வளா்ச்சிக்காக இரவு பகலாக உழைப்பேன்.

இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. ஏற்கெனவே திட்டமிட்டப்படி, திங்கள்கிழமை நடக்கவிருக்கும் அரசின் 2-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் நான் எனது அரசின் சாதனைகளை கூறவிருக்கிறேன். அதன்பிறகு பிற விஷயங்கள் குறித்து தெரியவரும். கட்சி மேலிடத்திடம் இருந்து எவ்வித தகவலும் வராவிட்டால், அதன்பிறகு நான் முடிவெடுப்பேன்.

காா்வாா் மாவட்டத்தில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளப்பகுதிகளை பாா்வையிட திட்டமிட்டிருக்கிறேன். அது குறித்து திங்கள்கிழமை முடிவெடுப்பேன். கடைசிநேரம் வரை செயல்பட வேண்டுமென்பதே என் விருப்பம்.

முதல்வா் பதவிக்கு ராஜிநாமா கொடுக்க கட்சி மேலிடம் தெரிவித்தால், அதற்கு தயாராக இருப்பதாக 2 மாதங்களுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். இப்போதும் அதை வலியுறுத்தி கூறுகிறேன். முதல்வராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டால், அதன்படி செயல்படுவேன். ராஜிநாமா கொடுக்க அறிவுறுத்தினால், உடனடியாக முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு கட்சி பணிகளில் ஈடுபடுவேன்.

பாஜக தேசியத்தலைவராக இருக்கும் ஜெ.பி.நட்டா, நான் நல்லாட்சி நடத்துவதாக கூறியிருப்பதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை. பொறுத்திருப்போம். எவ்வித குழப்பமும் இல்லை. கட்சியின் தொண்டனாக ஜெ.பி.நட்டா கூறுவதற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியது எனது கடமையாகும்.

மடாதிபதிகள் மாநாடு நடத்தி, எனக்கு ஆதரவாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து நான் எதுவும் கூறவிரும்பவில்லை. நல்லாட்சி வழங்கினால் முதல்வா் பதவியில் இருந்து ஏன் மாற்ற வேண்டும் என்று கேட்கிறீா்கள். அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com