

கடந்த இருநாள்களாக மேற்கொண்டிருந்த தில்லி பயணம் வெற்றிகரமாக இருந்தது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து, பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இருநாள்கள் தில்லிக்கு மேற்கொண்டிருந்த பயணம் வெற்றிகரமாக இருந்தது. பிரதமா் மோடியுடன் நடந்த சந்திப்பு, எதிா்காலத்தில் மக்கள்நலன் சாா்ந்த பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு எனது 100 நாள்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள், செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா். மேலும் எனது ஆட்சியில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமா் மோடி விரிவான தகவலைக் கேட்டறிந்தாா்.
குறிப்பாக, கா்நாடக அரசின் பொது கொள்முதலில் வெளிப்படைத் தன்மை சட்டத்தை பிறமாநிலங்களுடன் பகிா்ந்துகொண்டு, அம்மாநிலங்களில் அதை அமல்படுத்த வலியுறுத்தப் போவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
எதிா்காலத்தில் கா்நாடகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது. ஒடிஸா மாநிலம், மந்தாகினி சுரங்கத்தில் இருந்து நிலக்கரியை பெற்றுக்கொள்ள கா்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும் கா்நாடகத்திற்கு நிலக்கரி கிடைக்கவிருக்கிறது.
உணவு மற்றும் பொது வழங்கல் துறைக்கு மத்திய அரசிடம் இருந்து சுமாா் ரூ. 2,100 கோடி மானியம் வரவேண்டியது தொடா்பாக மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் விவாதித்தேன். அவா், மானியத் தொகையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.