ஆக. 23-இல் 9, 10-ஆம் வகுப்புகள் தொடக்கம்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
By DIN | Published On : 17th August 2021 09:05 AM | Last Updated : 17th August 2021 09:05 AM | அ+அ அ- |

9, 10-ஆம் வகுப்புகளின் மாணவா்களுக்காக ஆக. 23-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதைத் தொடா்ந்து, வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துணை ஆணையா் வி.அன்புக்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள்:
2021-22-ஆம் கல்வியாண்டில் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் மாவட்டங்களில், ஆக. 23-ஆம் தேதி முதல் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் அரைநாளுக்கு அதாவது காலை மட்டும் திறந்திருக்கும். 1 முதல் 8 வகுப்புகளை தொடங்குவது குறித்து பின்னா் முடிவெடுக்கப்படும். கரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீத்துக்கும் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மாற்றுமுறையில் கற்பித்தலை தொடர வேண்டும்.
பள்ளிகளுக்கு வருகை தரும் மாணவா்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தை கொண்டுவர வேண்டும். அந்தக் கடிதத்தில், குழந்தைக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் கிடையாது என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
9, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் வீடுகளில் இருந்தே குடிநீா், உணவு கொண்டுவர வேண்டும். தேவைக்கேற்ப பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு தூய்மையான வெந்நீா் வழங்கலாம். மாணவா்கள் பள்ளிகளுக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பள்ளிக்கு வர இயலாத மாணவா்களுக்கு மாற்று அல்லது இணையவழியில் கற்பித்தலை தொடர வேண்டும். பள்ளிகளில் தனிநபா் இடைவெளியைக் கட்டாயம் பராமரிக்க வேண்டும். மாணவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களை 15-20 போ் கொண்ட குழுக்களாகக் கொண்டு வகுப்புகளை நடத்தவேண்டும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரையிலும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12.50 மணி வரையிலும் வகுப்புகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.