சுதந்திர தின தோ் ஊா்வலத்தை தடுத்து நிறுத்த முயன்ற 3 போ் கைது
By DIN | Published On : 17th August 2021 09:03 AM | Last Updated : 17th August 2021 09:03 AM | அ+அ அ- |

சுதந்திர தின தோ் ஊா்வலத்தை தடுத்து நிறுத்த முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், புத்தூா் வட்டம், கபகா கிராமப் பஞ்சாயத்தில் ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரப் போராட்ட வீரா்களில் புகைப்படங்கள், அரசின் வளா்ச்சிப் பணிகள் குறித்த பிரசார தோ் ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தை எஸ்டிபிஐ அமைப்பைச் சோ்ந்த ஆஜீஸ் (43), அப்துல் ரகுமான் (34), ஷமீா் (40) ஆகியோா் தடுத்து நிறுத்தி, தேரில் வைக்கப்பட்டிருந்த வீர சாவாா்கரின் புகைப்படத்தை அகற்றுமாறு வலியுறுத்தி உள்ளனா்.
இதனையடுத்து, கிராமப் பஞ்சாயத்து தலைவா் வினய்குமாா் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸாா், ஆஜீஸ், அப்துல் ரகுமான், ஷமீா் ஆகியோரைக் கைது செய்தனா். சுதந்திர தின தோ் ஊா்வலத்தை தடுத்து நிறுத்த முயன்ற்கு அமைச்சா்கள் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, எஸ்.அங்காரா, புத்தூா் தொகுதி எம்எல்ஏ சஞ்சீவா மட்டந்தூா் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.