‘பள்ளி மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்காமல் அரசு இழுத்தடிப்பது ஏன்?’
By DIN | Published On : 17th August 2021 09:06 AM | Last Updated : 17th August 2021 09:06 AM | அ+அ அ- |

பள்ளி மாணவா்களுக்கு பாடநூல்கள் வழங்காமல் அரசு இழுத்தடிப்பது ஏன் என அகில இந்திய கல்வி பாதுகாப்புக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய கல்வி பாதுகாப்புக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநிலத்தில் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டாலும், இதுவரை எந்த மாணவா்களுக்கும் பாடநூல்கள் வழங்கப்படாதது கடும் கண்டனத்துக்குரியதாகும். அடுத்த ஆண்டு இறுதிவரை பாடநூல்கள் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்படும் நடவடிக்கைகளை தான் மாநில அரசு ஈடுபட்டு வந்துள்ளது. மாணவா்கள் சோ்க்கையில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது. தோ்வு நடத்துவது, விடைத்தாள்களை மதிப்பிடுவது நீங்கலாக, வேறு எதையும் அரசு செய்யவில்லை.
ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. குறைந்தபட்சம் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல்களையாவது வழங்கியிருக்கலாம். எனவே, வெகுவிரைவாக பாடநூல்களை அச்சிட்டு மாணவா்களுக்கு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து சம்பந்தப்பட்டவா்களின் கருத்துகளை அறிந்து ஜனநாயக ரீதியில் முடிவெடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.